அறிமுகம்

ஒரு நாட்டின் அல்லது பகுதியின் பண்பாட்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பவை அருங்காட்சியகங்கள். வரலாற்றுச் சான்றுகளையும் அரிய கலைப்பொருட்களையும் சேகரித்து, பாதுகாத்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்துவது அருங்காட்சியத்தின் தலையாய கடமையாகும். பழமையின் உறைவிடமாக மட்டுமின்றி புதுமையின் புகலிடமாகவும் மாறி வரும் அருங்காட்சியகத்தின் சேகரிப்பிலுள்ள பலவகையான அரும்பொருட்களை கண்ணும் கருத்துமாகப் பேணிப் பாதுகாக்கும் பணி அதன் பாதுகாப்பு ஆய்வகத்தையே சாரும்.

அருங்காட்சியகத்தின் விலைமதிப்பற்ற படிமங்களை பாதுகாக்கும் பொருட்டு, அப்போதைய அருங்காட்சியக கண்காணிப்பாளர் F.H.கிரேவிலி அவர்களின் வழிகாட்டுதலின்படி முனைவர் S.பரமசிவம் அவர்களை காப்பாட்சியராகக் கொண்டு ஒரு வேதியப் பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்தப் பட்டது. சென்னை அருங்காட்சியகத்தின் வேதியியப் பாதுகாப்பு ஆய்வகம் 1930-ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் அருங்காட்சியக ஆய்வகமாகும். படிமங்கள் மட்டுமன்றி மரம், கல், தந்தம், காகிதம், துணி போன்ற அனைத்து வகை அரும்பொருட்களையும் பாதுகாக்க இந்த ஆய்வகம் உதவியது. 1937 இல் ஆய்வகத்திற்கு ஒரு புதிய கட்டிடமும், 1963 இல் அருகில் இரண்டடுக்கு கட்டிடமும் கட்டப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.

சென்னை அருங்காட்சியகத்தின் அரும்பொருட்களைப் பாதுகாப்பதோடு பிற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலுள்ள கலைப்பொருட்களையும், ஓவியங்களையும் பாதுகாக்க இந்த ஆய்வகம் துணைபுரிந்து வருகின்றது. 1935 இல், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு சித்தன்னவாசல் ஒவியங்களை பாதுகாக்கவும் உதவியது. இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை, ஆளுநர் மாளிகை, சென்னைப் பல்கலைக்கழகம், அரசு கண் மருத்துவமனை, சென்னை உயர்நீதிமன்றம், புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம் போன்ற பல அரசு அலுவலகங்களில் உள்ள எண்ணெய் வண்ண ஓவியங்கள், கற்சிற்பங்கள், உலோகப் படிமங்கள் ஆகியன இந்த ஆய்வக வல்லுநர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர நடுவண் அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் தேசிய சுவடிகள் குழுமம், இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு வகையான சுவடிகளைப் பற்றிய விவரங்களைத் திரட்டி அவற்றைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இக்குழுமத்தின் சார்பாக, சென்னை அருங்காட்சியகத்தின் சுவடிகள் பாதுகாப்பு மையம் ஏழாண்டுகளாக, தமிழகத்திலுள்ள ஓலைச்சுவடிகள் மற்றும் காகித ஆவணங்களைப் பாதுகாத்துள்ளது. சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், உ.வே. சுவாமிநாத ஐயர் நூலகம், குப்புசாமி சாஸ்திரி நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற பெரிய சுவடிகள் நூலகங்கள் மட்டுமின்றி மடாலயங்கள், சித்த மருத்துவர்கள், தனி நபர்கள் முதலியோரும் இம்மையத்தின் மூலம் இலவசமாக பாதுகாப்புச் சேவைகளைப் பெற்றுள்ளனர். மேலும், பல கண்காட்சிகள் பயிலரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பயிற்சி

1974 -ஆம் ஆண்டு திரு.ஹரினாராயணா அவர்களால் சென்னை அருங்காட்சியகத்தில் தொடங்கப்பட்ட அரும்பொருட்கள் பாதுகாப்பு ‘ புத்தொளிப் பயிற்சி தொடர்ந்து ஆண்டுதோறும் இந்த ஆய்வகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதுமுள்ள அருங்காட்சியகங்கள், நூலகங்கள், பண்பாட்டு மையங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பாதுகாப்பு வல்லுநர்கள், ஆய்வாளர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நடைபெறும் இந்த ஒரு மாதப் பயிற்சிக்கு பெரும் மதிப்பும் வரவேற்பும் உள்ளது.

இளங்கலை வரலாறு, வேதியியல் மற்றும் நுண்கலை பயிலும் கல்லூரி மாணவ மாணவியருக்கு, கலைப்பொருட்கள் பாதுகாப்பில் குறுகியகாலப் பயிற்சிகளும் வகுப்புகளும் இந்த ஆய்வகத்தில் நடத்தப்படுகின்றன.

அரும்பொருட்களைப் பாதுகாப்பதிலும், மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் சென்னை அருங்காட்சியகத்தின் வேதியியப்பாதுகாப்பு பிரிவு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.